Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகை

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகை

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வரி விதிப்பு முறைகளில் மாற்றம் தேவை என்பது முதலீட்டாளர்கள் முன்வைத்த முக்கியக் கோரிக்கையாக இருந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியப் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்படும் நீண்டகால மூலதன ஆதாய வரியை (LTCG) நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி (SEBI) பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தற்போது, ஓராண்டுக்கு மேல் வைத்திருந்து விற்பனை செய்யப்படும் பங்குகளுக்கு 12.50 சதவீத நீண்டகால மூலதன ஆதாய வரியும், ஓராண்டுக்குள் விற்பனை செய்யப்படும் பங்குகளுக்கு 20 சதவீத குறுகியகால மூலதன ஆதாய வரியும் விதிக்கப்படுகிறது. இதுதவிர, பங்குப் பரிவர்த்தனை வரி மற்றும் டிவிடெண்ட் வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதனிடையே, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டுக்கு முன்னதாக செபி இந்தப் பரிந்துரைகளை அரசிடம் வழங்கியுள்ளது.

இந்தியப் பங்குகளில் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ளதால், வெளிநாடுகளில் உள்ள இந்திய சிறு முதலீட்டாளர்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து வெளியேறுவது ரூபாயின் மதிப்பிலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் செபி பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. அப்போது, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வரி விதிப்பு முறைகளில் மாற்றம் தேவை என்பது முதலீட்டாளர்கள் முன்வைத்த முக்கியக் கோரிக்கையாக இருந்துள்ளது. 

குறிப்பாக, நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சுமைகளைக் குறைப்பதன் மூலம் இந்தியச் சந்தையில் முதலீடு செய்வது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மேலும் கவர்ச்சிகரமானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட்களுக்கும் சலுகை

இதே போல், உள்நாட்டு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும் செபி மற்றொரு பரிந்துரையை முன்வைத்துள்ளது.அதன்படி, ஓராண்டுக்கு மேல் வைத்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்று, மற்றொரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தால், அதை வரி விதிப்புக்குரிய விற்பனையாகக் கருதக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாறும்போது, அது யூனிட்களை விற்பனை செய்ததாகக் கருதப்பட்டு, அதற்கேற்ப மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவர செபி விரும்புகிறது.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையின் கீழ், சுமார் ரூ.82.6 லட்சம் கோடி சொத்துகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. எஸ்ஐபி எனப்படும் மாதாந்திர முதலீட்டுத் திட்டங்கள் மூலம் மட்டும் சராசரியாக மாதம் ரூ.30,000 கோடி முதலீடு வருகிறது. எனவே, வரிச் சலுகைகள் நடைமுறைக்கு வந்தால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் நீண்டகாலம் சந்தையில் முதலீடு செய்வதற்கும், வெளிநாட்டு முதலீடுகள் மீண்டும் அதிகரிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முந்தைய செய்தி
இடைத்தேர்தலுக்காக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்: போட்டு உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்
அடுத்த செய்தி
நெருக்கடியிலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்

தொடர்புடைய செய்திகள்