Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பணத்தை (பற்றி) எண்ணுவோம்!

பணத்தை (பற்றி) எண்ணுவோம்!

கட்டுரையாளர் நிதி மற்றும் காப்பீடு குறித்து நீண்டகாலமாக எழுதி வரும் எழுத்தாளர்; பெருநிறுவன வரலாற்று நூலாசிரியர்.

பகிரவும் WhatsApp Facebook

பணம். இன்றைய உலகில் உணவு, உடை, உறைவிடம் உள்ளிட்ட நமது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக்கூட அது அவசியமாகிவிட்டது. உலக வாழ்க்கையிலிருந்து விலகி
வாழ்பவர்களால்கூட இந்தத் தேவையிலிருந்து முற்றிலும் தப்ப முடியாது.

பணத்தைப் பற்றி நினைக்கிறோம். கனவு காண்கிறோம். அது இல்லாதபோது அந்தக் கவலையே நம் தூக்கத்தைக் கெடுக்கிறது. பணம் நமக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும்
தருகிறது. மனத்தெம்பைத் தருகிறது. கர்வத்தையும் தரலாம். கவலையையும் துயரத்தையும் கூடத் தரலாம்.

பணம் சம்பாதிப்பது, அதைப் பாதுகாப்பது, நாம் விரும்புபவர்களிடம் கொண்டு சேர்ப்பது என பணத்தைக் கையாள்வதில் நமக்குப் பல பொறுப்புகள் உண்டு.

எதற்காகப் பணம்?

பணம் வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். சம்பாதிக்கிறோம். செலவு செய்கிறோம். சேமிக்கிறோம். முதலீடு செய்கிறோம். நம்மில் சிலர் சேர்த்து வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

சம்பளம், சேமிப்பு, முதலீட்டு வருமானம், வீட்டு மதிப்பு, தங்கத்தின் மதிப்பு என்று பணத்தைப் பற்றி பலவிதமாக எண்ணிப் பார்க்கிறோம்.

ஆனால், இந்தப் பணம் எதற்காக என்று எண்ணிப் பார்க்கிறோமா?

பாதுகாப்புக்கா? நமது கடமைகளை நிறைவேற்றவா? தேவைகளைப் பூர்த்தி செய்யவா? சுதந்திரமாக வாழவா? அந்தஸ்துக்காகவா? குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவா? நிம்மதியான முதுமைக்காகவா? அல்லது நம்மிடம் இருக்கும் தொகை மேலும் மேலும் பெருகுவதைப் பார்த்து மகிழவா? 

எவ்வளவு பணம்? 

பணம் வேண்டும். இன்னும் கொஞ்சம் பணம் வேண்டும். அதற்குப் பிறகு? இன்னும் கொஞ்சம்…

எவ்வளவு பணம் இருந்தால் போதும்?

இந்தக் கேள்விக்கு நம்மில் பலரிடம் பதில் இல்லை. ‘போதும்’ என்று எங்கே நிறுத்துவது என்று நாம் முடிவு செய்வதே இல்லை. 

எவ்வளவு பணம் தேவை என்பது தனிநபரின் வாழ்க்கைக் குறிக்கோள்களைச் சார்ந்தது. ஒரு குடும்பமே மாதம் ரூ. 10,000-ல் வாழ முடியும். வசதியாக வாழும் ஒருவருக்கோ தனது சொந்தச் செலவுகளுக்கே சில லட்சங்கள் தேவைப்படலாம்.

பணத்தின் தேவை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மாறிக்கொண்டே இருக்கும். வேலைக்குச் சேர்ந்த புதிதில் நமது தேவைகளும் இலக்குகளும் வேறு. குடும்பம், குழந்தைகள் என்று வரும்போது பொறுப்புகள் மாறுகின்றன. ஓய்வுக்காலத்தை நெருங்கும்போது வருமானம், செலவு, சேமிப்பு பற்றிய கணக்கே வேறாகிவிடுகிறது. 

அதனால்தான் ‘எவ்வளவு பணம் வேண்டும்?’ என்ற கேள்விக்கு ஒரு தொகையை மட்டும் பதிலாகச் சொல்லிவிட முடியாது. இன்று நமக்குப் போதுமானதாகத் தோன்றும் தொகை நாளை போதாமல் போகலாம். அதேபோல, ஒருகாலத்தில் மிக முக்கியமாகத் தோன்றிய செலவு பின்னர் தேவையற்றதாகவும் தோன்றலாம். 

பணத்தைப் பற்றிய நமது முடிவுகளும் அதற்கேற்ப மாற வேண்டும்.

பணத்தின் பயன் என்ன?

பணம் நமக்குப் பல வாய்ப்புகளைத் தருகிறது. விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் தருகிறது. ஆனால் பணம் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் முடிவு
செய்யாவிட்டால், ஒரு கட்டத்தில் நமக்காகப் பணமே முடிவுகளை எடுக்க ஆரம்பித்துவிடலாம். அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நமக்குப் பிடித்த வேலையைக்கூட
விட்டுவிடலாம். சேமிக்க வேண்டும் என்பதற்காக அனுபவிக்க வேண்டியவற்றைத் தொடர்ந்து தள்ளிப்போடலாம். அல்லது இன்றைய ஆசைகளுக்காகச் செலவு செய்துவிட்டு நாளைய
தேவைகளைப் புறக்கணிக்கலாம். 

அதனால்தான் தனிநபர் நிதி நிர்வாகத்தில் ‘எவ்வளவு சம்பாதிக்கலாம்?’, ‘எங்கே முதலீடு செய்யலாம்?’, ‘எவ்வளவு வருமானம் கிடைக்கும்?’ என்பவை முதல் கேள்விகளாக இருக்கக் கூடாது.

இவற்றுக்கு முன்னால் கேட்க வேண்டிய ஒரு கேள்வி இருக்கிறது.

நம்மைப் பொறுத்தவரை பணத்தின் பயன் என்ன? அதை எப்படிச் சரியாகக் கையாள்வது? அதற்கு பெரிய நிதித் திட்டங்கள்தான் தேவை என்பதில்லை. நாம் தினமும் எடுக்கும் சிறிய பண முடிவுகளில்கூட இந்தக் கேள்வி இருக்கிறது. எதற்குச் செலவு செய்கிறோம், எதைப் பாதுகாக்கிறோம், எதை நாளைக்காக ஒதுக்குகிறோம் என்பதிலெல்லாம் அதன் பதில் இருக்கிறது.

பணத்தை நிர்வகிப்பதில் எத்தனையோ பரிமாணங்கள் உள்ளன. 

செலவு, சேமிப்பு, முதலீடு, காப்பீடு, சொத்துகளை நிர்வகிப்பது போன்றவற்றோடு, நிதி மோசடிகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது.

வரிச் சலுகைக்காகக் காப்பீடு வாங்குகிறோம். ஆனால் நமது நிதிநிலையையே புரட்டிப்போடக்கூடிய ரிஸ்க் எது என்பதை முதலில் யோசிக்க வேண்டாமா?

சொத்துக்களைச் சேர்க்கிறோம். ஆனால் அவை நமக்குப் பிறகு யாருக்குப் போக வேண்டும்? நாமினேஷன் சரியாக இருக்கிறதா? உயில் எழுத வேண்டுமா? நாம் சேர்த்த சொத்து, அதைப்
பெற வேண்டியவர்களிடம் சிக்கலில்லாமல் போய்ச் சேருமா என்பதையும் கவனிக்க வேண்டும்.

முதலீட்டில் இன்னும் அரை சதவிகிதம் கூடுதல் வருமானம் எங்கே கிடைக்கும் என்று தேடுகிறோம். அதே நேரத்தில், ஒரு மோசடி லிங்க்கை நம்பிக் கிளிக் செய்து பல ஆண்டுகளாகச் சேமித்த பணத்தை இழக்கும் அபாயத்தைப் பற்றி கவனமாக இருக்கிறோமா? அதிகமாகச் சேமிப்பது எப்போதுமே சரி என்று சொல்ல முடியாது. அதிகமாகச் செலவு
செய்வதும் சரியல்ல. 

இவற்றில் முக்கியமானது, நமது பணம் நாம் விரும்பும் வாழ்க்கைக்குப் பயன்படுகிறதா என்பதுதான்.

விஷயங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அவற்றுக்குப் பின்னால் ஒரு கேள்வி
தொடர்ந்து இருக்கும்.

இந்தப் பணம் எதற்காக? அது நமக்கு என்ன செய்ய வேண்டும்?

பணத்தை நிர்வகிப்பது என்றால் அதை எப்படியாவது மேலும் மேலும் பெருக்கிக்கொண்டே போவது மட்டுமல்ல. நமக்கு முக்கியமான விஷயங்களுக்கு, நாம் விரும்பும் விதத்தில், நம்மிடம் இருக்கும் பணத்தைப் பயன்படச் செய்வதும் நல்ல நிதி நிர்வாகம்தான்.

அதற்கான பதில் எல்லோருக்கும் ஒன்றாக இருக்காது. ஒரே மனிதருக்குக்கூட வாழ்க்கையின்
எல்லாக் கட்டங்களிலும் ஒரே பதிலாக இருக்காது.

ஆனால் அவ்வப்போது அந்தக் கேள்வியைக் கேட்காவிட்டால், பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பதிலும் முதலீடு செய்வதிலும் நாம் திறமை பெற்றாலும், எங்குச் செல்கிறோம் என்றே
தெரியாமல் பயணம் செய்வதைப் போலாகிவிடும்.

அதனால் பணத்தை எண்ணுவதைப் போல, அவ்வப்போது பணத்தைப் பற்றியும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதன் பொருளையும் பயனையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

முந்தைய செய்தி
சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் முதல்முறையாக எக்ஸ்பிரஸாக மாற்றம்
அடுத்த செய்தி
தேங்காய் வரத்து அதிகரிப்பு: விலை ரூ.4 வரை சரிவு

தொடர்புடைய செய்திகள்