Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கூடாரங்களில் புகுந்த வெள்ளம் - 5 பேர் உயிரிழப்பு

கூடாரங்களில் புகுந்த வெள்ளம் -  5 பேர் உயிரிழப்பு
காஸாவின் டெய்ர் அல் பலா நகருக்குத் தெற்கே, போரால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாமில் தேங்கிய மழை நீர்.

காஸாவில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

பகிரவும் WhatsApp Facebook

காஸாவில் பெய்த புயல் மழையால் மண் மேடு சரிந்து மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த சுமார் 70 ஆயிரம் கூடாரங்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

மத்திய காஸாவின் டெய்ர் அல் பலா நகருக்குத் தெற்கே, போரால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாமில் கடந்த சனிக்கிழமை கனமழை பெய்தது. அப்போது, முகாமை ஒட்டியிருந்த மணல் மேடு சரிந்ததில், பெரிய மணற்பாறையும் மண்ணும் அருகிலிருந்த கூடாரங்கள் மீது விழுந்தன. இதில் மூன்று குழந்தைகளும் இரண்டு பெண்களும் உயிரிழந்ததாக காஸா குடிமைப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.


இடிபாடுகளில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக அத்துறையின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸால் தெரிவித்தார். சம்பவ இடத்தில் சிலர் பெரிய பாறையைத் தூக்க முயல்வதையும், மற்றவர்கள் அதன் அடியில் மண்வெட்டிகளால் தோண்டுவதையும் சமூக வலைதளங்களில் வெளியான காணொளி காட்டியது.


மழைக்காலத்தில் மணல் குவியல்கள், உயரமான மண் மேடுகள் அருகே கூடாரங்கள் அமைக்கவோ, தங்கவோ வேண்டாம் என இடம்பெயர்ந்த மக்களுக்கு குடிமைப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீட்புப் பணிக்குத் தேவையான உபகரணங்களை வழங்குமாறு மனிதாபிமான உதவி அமைப்புகளிடமும் அது கோரியுள்ளது.


மழை தொடங்கிய முதல் நாளிலேயே, பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த சுமார் 70 ஆயிரம் கூடாரங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததாக ஹமாஸ் நிர்வாகத்தின் ஊடக அலுவலகம் தெரிவித்தது. காஸாவின் பல பகுதிகளில் ஏற்கெனவே விரிசல் ஏற்பட்டிருந்த சுவர்களும் கூரைகளும் இடிந்து விழுந்தன. இதில் பலர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.


வெள்ளத்தால் தங்குமிடங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, காஸா நகரிலும் பிற பகுதிகளிலும் உள்ள முகாம்களிலிருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வார இறுதியில் வெளியேறின. போரால் வீடுகளை இழந்து கூடாரங்களில் தங்கியிருந்த பலருக்கு, கனமழையால் அந்தத் தற்காலிகத் தங்குமிடங்களும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


2023 அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து போர் தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் நீடித்த போரில் காஸாவின் பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்தனர். குடியிருப்புப் பகுதிகள் பரவலாகச் சேதமடைந்ததால், அவர்களில் பலர் கூடாரங்களிலும் தற்காலிகக் குடில்களிலும் வசித்து வருகின்றனர்.


எகிப்து, கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் 2025 அக்டோபர் 10-ம் தேதி அமலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்துக்குப் பிறகும் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்களையும் தரைவழி நடவடிக்கைகளையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது.



முந்தைய செய்தி
முப்படை ஒருங்கிணைப்புக்கு ஜப்பான் திட்டம்
அடுத்த செய்தி
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

தொடர்புடைய செய்திகள்