Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்திய பங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் - சீன சந்தையின் பரிந்துரை குறைப்பு

இந்திய பங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் - சீன சந்தையின் பரிந்துரை குறைப்பு

சீனப் பங்குகளுக்கான பரிந்துரையை ‘நடுநிலை’க்குக் குறைத்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நிறுவனங்களின் லாப வளர்ச்சி மேம்படும் என்ற எதிர்பார்ப்பில், இந்தியப் பங்குகளுக்கான முதலீட்டுப் பரிந்துரையை ஹெச்எஸ்பிசி உயர்த்தியுள்ளது. அதேநேரத்தில், சீனப் பங்குகளுக்கான பரிந்துரையை ‘நடுநிலை’க்குக் குறைத்துள்ளது.

ஆசிய பசிபிக் பங்குச் சந்தைகள் குறித்த அறிக்கையை சர்வதேச வங்கி மற்றும் நிதிச் சேவைக் குழுமமான ஹெச்எஸ்பிசி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியப் பங்குகளுக்கான பரிந்துரையை ‘நடுநிலை’யிலிருந்து ‘அதிக ஒதுக்கீடு’ என உயர்த்தியுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள், தங்களது முதலீட்டுத் தொகுப்பில், இந்தியப் பங்குகளுக்கு அதிக பங்கு அளிக்கலாம் என்பதே இதன் பொருளாகும்.


பிற வளரும் சந்தைகளைக் காட்டிலும் இந்தியப் பங்குகள் நீண்ட காலமாகப் பின்தங்கியிருந்தன. இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட விலைத் திருத்தத்தால், குறிப்பாக, பெரிய நிறுவனங்களின் பங்குகள் இப்போது கவர்ச்சிகரமான மதிப்பீட்டில் உள்ளதாக ஹெச்எஸ்பிசி தெரிவித்துள்ளது.
வட்டி விகிதமும், எண்ணெய் விலையும் உயர்ந்தபோதும் இந்தியாவின் வளர்ச்சி தாக்குப்பிடித்துள்ளது. கடன் வளர்ச்சி வலுவாக இருப்பதுடன், நிறுவனங்களின் லாபக் கணிப்புகள் குறைக்கப்படும் வேகமும் தணிந்துள்ளது.


வளரும் சந்தைகளில் முதலீடு செய்யும் சர்வதேச நிதிகளில் 22 சதவீதம் மட்டுமே இந்தியாவுக்கு அதிக ஒதுக்கீடு செய்துள்ளன. இதனால் இந்தியாவுக்கான ஒதுக்கீடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆசிய சந்தைகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பங்குகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில், இந்தியப் பங்குகளில் விலை ஏற்ற இறக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதும், முதலீட்டைப் பல துறைகளில் பரவலாக்கும் வாய்ப்பும் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளன.


துறை வாரியாக வங்கிகளுக்கு ஹெச்எஸ்பிசி முன்னுரிமை அளித்துள்ளது. தொழில்துறை இயந்திரங்கள், சிமென்ட், துறைமுகங்கள், மின்னணு உற்பத்திச் சேவைகள் ஆகியவற்றிலும் வாய்ப்புகளைக் காண்கிறது. நுகர்வுத் துறையில் அத்தியாவசியப் பொருள் நிறுவனங்களைவிட சில்லறை விற்பனை மற்றும் வாகன நிறுவனங்களை விரும்புகிறது. காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மீதும் சாதகமான பார்வையைத் தொடர்கிறது.


அதேநேரத்தில், கச்சா எண்ணெய் விலை உயர்வும் எல் நினோ வானிலை நிகழ்வு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இந்தியாவுக்கான அபாயங்கள் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. எரிசக்தி விலை தொடர்ந்து அதிகமாக இருந்தால் உள்நாட்டுத் தேவையும் ரூபாய் மதிப்பும் அழுத்தத்துக்கு உள்ளாகலாம்.
பணவீக்கம் அதிகரித்தால் கிராமப்புற நுகர்வு பாதிக்கப்படலாம். எனினும், வரும் காலாண்டுகளில் நிறுவனங்களின் லாபக் கணிப்புகள் குறைக்கப்பட்டாலும், அதன் தாக்கம் ஒட்டுமொத்தச் சந்தை நம்பிக்கையைக் கணிசமாகப் பாதிக்கும் அளவுக்கு இருக்காது என ஹெச்எஸ்பிசி கருதுகிறது.


சீனப் பங்குகளின் மதிப்பீடு கவர்ச்சிகரமாக இருந்தாலும், சந்தையைத் தொடர்ந்து உயர்த்தக்கூடிய காரணிகள் குறைவாக இருப்பதாக ஹெச்எஸ்பிசி தெரிவித்துள்ளது. நுகர்வோர் நம்பிக்கை பலவீனம், வீட்டுவசதிச் சந்தையில் நீடிக்கும் நெருக்கடி, மந்தமான உள்நாட்டு முதலீடு ஆகியவை சீனாவின் வளர்ச்சிக்கு சவாலாக உள்ளன.


கடன் பெற்று பங்குகளை வாங்கும் அளவு குறைந்திருப்பதையும் முதலீட்டாளர் ஆர்வம் தணிந்ததற்கான அறிகுறியாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், சீன வங்கிகள், உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு விரிவடைவதால் பலன் பெறக்கூடிய தொழில்நுட்பச் சாதன நிறுவனங்கள் மீதான சாதகமான பார்வையை ஹெச்எஸ்பிசி தொடர்கிறது.

முந்தைய செய்தி
பட்டாசுகளால் 4.5% அதிகரித்த காற்று மாசு - சென்னைதான் டாப்!
அடுத்த செய்தி
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் உயர்வு

தொடர்புடைய செய்திகள்