Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இடைத்தேர்தல் தொகுதிகளில் ‘திடீர்’ அரசு விழாக்கள் - முதல்வர் வியூகத்தால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி

இடைத்தேர்தல் தொகுதிகளில் ‘திடீர்’ அரசு விழாக்கள் - முதல்வர் வியூகத்தால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி

முதல்வர் விஜய் இங்கு மட்டுமல்ல, தெலங்கானா சென்றாலும்கூட அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடுகின்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

இடைத்தேர்தல் நடக்கவுள்ள 5 தொகுதிகளிலும் ‘திடீர்’ அரசு விழாக்களை நடத்தி, முதல்வர் விஜய் மக்களைச் சந்திக்கும் வகையில் பிரச்சார வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. அரசு செலவில் தேர்தல் பிரச்சாரத்தை தவெக நடத்துவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

பெருந்துறை, கரூர், விராலிமலை, திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்த தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்குடன் தவெக தீவிரமாக களமிறங்கியுள்ளது.
தாராபுரம், மதுராந்தகம் தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றாலும், திமுகவின் வாக்கு வங்கியில் பெரிய அளவில் சேதாரம் ஏற்படவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் முதல்வர் விஜய் 2 நாட்கள் பிரச்சாரம் செய்தும், அதற்கேற்ற வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெறவில்லை.

இதனால், மீதமுள்ள 5 தொகுதிகளிலும் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள், தவெகவுக்கு கடுமையான சவாலைக் கொடுக்கும் என்பது கள நிலவரமாக இருக்கிறது. ஆளுங்கட்சியாக இருப்பதால், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான், மக்கள் ஆதரவு தங்கள் பக்கம் உள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்த முடியும் என முதல்வர் விஜய் நம்புகிறார்.

எனவே, இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் ’திடீர்’ அரசு விழாக்களை நடத்தி, முதல்வர் விஜய் மக்களைச் சந்திக்கும் வகையில் பிரச்சார வியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக திருச்சி வழியாக, விராலிமலை தொகுதி அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேருந்து நிலையத் திறப்பு, புதிய திட்டம் தொடக்கம், கல்வி கடன், வீட்டுமனைப்பட்டா, மகளிர், விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்.

அடுத்தகட்டமாக இன்று (நவ. 3) ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்றார். குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடக்கும் விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்று, பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரத்தில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த ஊர்களில் முதல்வரின் விழாக்கள் ஏற்பாடு செய்வதன் மூலம் அரசு செலவில் தவெக பிரச்சாரத்தை நடத்துவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. 

ஒவ்வொரு விழாவின்போதும், ரோடு ஷோ, விவசாயிகள் சந்திப்பு, பெண்களுக்கு நலத்திட்டங்கள் என மக்கள் சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் முதல்வரின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை எதிர்கொள்ள முதல்வர் வகுத்துள்ள இந்த பிரச்சார வியூகம் எதிர்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் நலப்பணிக்காக சுற்றுப்பயணம்

முதல்வர் விஜய் இங்கு மட்டுமல்ல, தெலங்கானா சென்றாலும்கூட அவரைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடுகின்றனர். 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தேர்தலுக்காக தொகுதி வாரியாகச் சென்று மக்களை முதல்வர் சந்திக்கிறார் என்று கூறுவது தவறானது. மக்கள் நலப்பணிகளுக்காக அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். - கே.எஸ்.செங்கோட்டையன் (வருவாய்த் துறை அமைச்சர்)


கொத்து புரோட்டா போட்டு விடுவார்கள்!


ஆட்சி அமைத்த நான்கு மாதங்களில், தவெக அரசின் செல்வாக்கு சரிந்துள்ளது நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் அம்பலம் ஆகிவிட்டது. அடுத்து வரவுள்ள இடைத் தேர்தல்களில் மக்கள் கொத்து புரோட்டா போட்டு விடுவார்கள் என முதல்வர் விஜய் பயப்படுகிறார். இந்த பயத்தால் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அரசு செலவில் நலத்திட்டங்கள் மூலம் முதல்வர் விஜய் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். - செல்லூர் ராஜு, அதிமுக முன்னாள் அமைச்சர்.

முந்தைய செய்தி
`ரேஷன் கடைகளில் தேவையான பொருட்கள் உள்ளது' - அமைச்சர் காந்திராஜ்
அடுத்த செய்தி
மழை படிப்படியாகக் குறையும் - ஓரிரு இடங்களில் கனமழை

தொடர்புடைய செய்திகள்