Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நிஃப்டி 50 பங்குகளில் முதலீடு - 21 ஆண்டுகளில் இல்லாத சரிவு

நிஃப்டி 50 பங்குகளில் முதலீடு - 21 ஆண்டுகளில் இல்லாத சரிவு

நிஃப்டி 50 குறியீட்டுக்கு வெளியே உள்ள நடுத்தர நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

பகிரவும் WhatsApp Facebook

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்ற நிறுவனப் பங்குகளிலும் முதலீட்டை அதிகரித்து வருவதால், முன்னணி 50 நிறுவனப் பங்குகளுக்கான முதலீட்டு ஒதுக்கீடு குறைந்துள்ளது.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், நிஃப்டி 50 குறியீட்டில் இடம்பெற்றுள்ள பங்குகளுக்கு ஒதுக்கும் முதலீடு, கடந்த 21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் இந்த ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் கீழே சரிந்துள்ளது.


தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூன் காலாண்டில் 51.4 சதவீதமாக இருந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் நிஃப்டி 50 முதலீட்டு ஒதுக்கீடு, செப்டம்பர் காலாண்டில் 49.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது 2019 டிசம்பரில் பதிவான 63 சதவீத உச்ச அளவைவிட 13.5 சதவீதப் புள்ளிகள் குறைவாகும்.


உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த நிஃப்டி 50 முதலீட்டு ஒதுக்கீடும் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாகக் குறைந்து, 54.6 சதவீதமாகியுள்ளது. இது முந்தைய காலாண்டைவிட 1.4 சதவீதப் புள்ளிகளும், 2025 டிசம்பரைவிட 6.3 சதவீதப் புள்ளிகளும் குறைவாகும்.
அதேநேரத்தில், சந்தை மதிப்பில் முன்னணியில் உள்ள 10 சதவீத நிறுவனப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீட்டு ஒதுக்கீடு 4.2 சதவீதப் புள்ளிகள் உயர்ந்து, 87.6 சதவீதமாகியுள்ளது. நிஃப்டி 50 குறியீட்டுக்கு வெளியே உள்ள நடுத்தர நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.


கடந்த மூன்று ஆண்டுகளில் நிஃப்டி 50 குறியீடு ஆண்டுக்கு சராசரியாக 4.8 சதவீத வருமானம் அளித்துள்ளது. இதே காலத்தில் நிஃப்டி மிட்கேப் 150 குறியீடு 13 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 250 குறியீடு 13.3 சதவீதமும் வருமானம் வழங்கியுள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிஃப்டி 50 முதலீட்டு ஒதுக்கீடு 56.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் ஒதுக்கீடும் 62.4 சதவீதமாகச் சரிந்துள்ளது.


மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீட்டுக் குவிப்பு குறியீடு 35 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 119 ஆகக் குறைந்துள்ளது. நிறுவன முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்தக் குறியீடும் ஜூனில் இருந்த 145-லிருந்து செப்டம்பரில் 132 ஆக சரிந்துள்ளது.
முன்னணி 50 நிறுவனப் பங்குகளை மட்டுமே நம்பியிருக்காமல், மற்ற நிறுவனப் பங்குகளிலும் முதலீட்டை அதிகரிக்கும் போக்கு உருவாகியுள்ளது. இதனால் முதலீடு பல்வேறு நிறுவனங்களுக்கு பரவலாகச் செல்வதாக என்எஸ்இ தெரிவித்துள்ளது.


என்எஸ்இயில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பில் நிஃப்டி 50 நிறுவனங்களின் பங்கு 39.5 சதவீதமாக மட்டுமே உள்ளது. இருப்பினும், நிறுவன முதலீட்டாளர்கள் இந்தப் பங்குகளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். தற்போது மற்ற நிறுவனப் பங்குகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருவதால், முதலீட்டுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஒருசில பெரிய நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் நிலை படிப்படியாகக் குறைந்து வருகிறது.

முந்தைய செய்தி
எம்வீ பங்கு 61% உயர வாய்ப்பு - ஜெஃப்ரீஸ் கணிப்பு
அடுத்த செய்தி
அன்பில் மகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி

தொடர்புடைய செய்திகள்