Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்னையில் பெருகும் தனியார் ஸ்டடி ஹால்கள் - லாபம் ஈட்டுவதில் சிக்கல்

சென்னையில் பெருகும் தனியார் ஸ்டடி ஹால்கள் - லாபம் ஈட்டுவதில் சிக்கல்

அண்ணா நகரில் மட்டும் 50 முதல் 60 மையங்கள் வரை செயல்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தனியார் ஸ்டடி ஹால்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.


குறிப்பாக, அண்ணா நகர் பகுதியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஸ்டடி ஹால்கள் செயல்பட்டு வருகின்றன. அமைதியான சூழல், ஏசி, வைஃபை, தனிப்பட்ட இருக்கை உள்ளிட்ட வசதிகளுடன் செயல்படும் இத்தகைய மையங்கள், தற்போது தனித்துவமான தொழிலாக உருவெடுத்துள்ளன. அதேநேரத்தில், அதிகரிக்கும் போட்டி, வாடகை உயர்வு, பராமரிப்புச் செலவு ஆகியவை இந்தத் தொழிலில் லாபம் ஈட்டுவதற்குச் சவாலாக மாறியுள்ளன.

இதுகுறித்து, நறுவீ நாலேட்ஜ் பாக்ஸ் ஸ்டடி ஹால் உரிமையாளர் நவநீதன் கூறியதாவது:

சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகி வந்தபோது, மாணவர்கள் அமைதியாகவும் இடையூறின்றியும் படிப்பதற்கான இடத்தின் தேவை இருந்ததை உணர்ந்தேன். அதனடிப்படையில் நண்பர்களின் ஆலோசனையுடன் இந்தத் தொழிலில் இறங்கினேன். 2019-ல் சென்னையில் 10 முதல் 15 ஸ்டடி ஹால்களே இருந்தன. தற்போது அண்ணா நகரில் மட்டும் 50 முதல் 60 மையங்கள் வரை செயல்படுகின்றன.

ஆரம்பத்தில் 72 இருக்கைகளுடன் தொடங்கிய மையத்தில், தற்போது 41 இருக்கைகள் உள்ளன. இதில் 25 முதல் 30 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஏசி, வைஃபை, தனிப்பட்ட இருக்கை, புத்தகங்களைப் பாதுகாப்பாக வைக்கும் வசதி ஆகியவற்றை மாணவர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். தற்போது 5 மணி நேரப் பயன்பாட்டுக்கு ரூ.750, 10 மணி நேரத்துக்கு ரூ.1,600, 15 மணி நேரத்துக்கு ரூ.2,200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை அதிகரிக்க முடியாத அளவுக்கு போட்டி நிலவுகிறது. ஆனால், மாத வாடகை ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 முதல் ரூ.80,000 வரை உயர்ந்துள்ளது.

இந்தத் தொழிலைத் தொடங்க ஆரம்பத்தில் ரூ.13 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்தேன். பராமரிப்பு, ஊழியர்கள், மின்சாரம் உள்ளிட்ட செலவுகளும் தொடர்ந்து ஏற்படுகின்றன. குறைந்தபட்சம் 60 சதவீதத்துக்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பினால்தான் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியும்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் தொழிலின் வளர்ச்சி என்பது யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் மற்றும் அரசுப் பணியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அமையும். காலிப்பணியிடங்கள் அதிகரித்து, தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தால் மட்டுமே ஸ்டடி ஹால் துறைக்கும் தொடர்ந்து வளர்ச்சி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஸ்டடி ஹால் தொழிலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 4 காரணிகள்

  • UPSC, TNPSC தேர்வு அறிவிப்புகள்
  • போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் எண்ணிக்கை
  • அரசுப் பணியிடங்களின் எண்ணிக்கை
  • வாடகை மற்றும் பராமரிப்புச் செலவுகள்


முந்தைய செய்தி
தீ விபத்து ஏற்பட்டால் கட்டிட உரிமையாளருக்கு சிறை - தீயணைப்பு சட்டத்தில் அதிரடி திருத்தம்
அடுத்த செய்தி
மனிதனின் டிஜிட்டல் குளோன்களை உருவாக்கும் நிறுவனம்

தொடர்புடைய செய்திகள்