Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

26,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி நிதி

26,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி நிதி
மகளிர் சுய உதவிக்குழுவின் கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர் விஜய்க்கு அவரது உருவப்படம் வரைந்த ஓவியத்தை பரிசளித்த பெண்.

இதுவரை 5.23 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 60 லட்சம் மகளிருக்கு சுமார் ரூ.2,62,311 கோடி வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மாநிலம் முழுவதும் 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான ரூ. 3,000 கோடி வங்கி நிதி இணைப்புகளை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ச.ஜோசப் விஜய் துவக்கி வைத்தார்.

திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், 9,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,110 கோடி ரூபாய் வங்கி நிதி இணைப்புகளை வழங்கினார். மேலும், பல்வேறு வகையான வாழ்வாதார நிதியுதவிகளையும், இளைஞர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி தொடங்குவதற்கான அனுமதி ஆணைகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் விற்பனை அங்காடிகள் அமைப்பதற்கான அனுமதி ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.


சுய உதவிக் குழு உறுப்பினர்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதார வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வங்கிக் கடன் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி இதுவரை 5.23 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 60 லட்சம் மகளிருக்கு சுமார் ரூ.2,62,311 கோடி வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.


2026-27-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், 4,18,673 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பாக 38,000 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த இலக்கினை நிறைவு செய்திடும் வகையில், இதுவரை 1,70,624 இலட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 16,560 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 
இவ்விழாவினைத் தொடர்ந்து, ஓரிரு நாட்களில் மாநிலம் முழுவதும் 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும் 3,000 கோடி ரூபாய் வங்கி நிதி இணைப்புகளை விரைந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் விற்பனையை மேம்படுத்துவதற்கான ‘SHE Mart’ அனுமதி ஆணைகள், ‘மதி’ அனுபவ அங்காடிகளுக்கான அனுமதி ஆணைகள், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கக் கட்டடத்திற்கான அனுமதி ஆணைகள் ஆகியவற்றையும் முதல்வர் வழங்கினார்.


முன்னதாக, விழா அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த “ஒரு வேர் எண்ணற்ற தொழில்கள்” என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடந்து வந்த 'வெற்றிப் பாதையை' நோக்கி தமிழ்நாட்டின் 40 ஆண்டுகால ‘பெண்மையின் பேரெழுச்சி’ என்ற புகைப்படக் கண்காட்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் அடங்கிய கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டு, சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.


விழாவில், அமைச்சர்கள் நா.ஆனந்த், கோ.க.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வே.சம்பத் குமார், ம.விஜய் பாலாஜி, சி.விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



முந்தைய செய்தி
தங்கம் வாங்க போட்டிபோடும் நாடுகள் - 3 மாதங்களில் 321 டன் கொள்முதல்
அடுத்த செய்தி
காத்திருப்புக் காலம் 12-ல் இருந்து 8 வாரங்களாக குறைப்பு

தொடர்புடைய செய்திகள்