Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வாகனக் காப்பீட்டில் 4 அடுக்கு முறை; டிசம்பர் 15 முதல் அமல்

வாகனக் காப்பீட்டில் 4 அடுக்கு முறை; டிசம்பர் 15 முதல் அமல்

புதிய முறையில், மூன்றாம் நபர் காப்பீடு மட்டும் கட்டாயமாக இருக்கும். மற்ற காப்பீட்டுப் பாதுகாப்புகளை வாகன உரிமையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப தேர்வு செய்யலாம்.

பகிரவும் WhatsApp Facebook

கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான காப்பீட்டில் நான்கு அடுக்கு முறையை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய நடைமுறை, வரும் டிசம்பர் 15 முதல் அமலுக்கு வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தேசிய காப்பீட்டு நிறுவனம் தொடர்பான வழக்கில் இந்த நான்கடுக்கு காப்பீட்டு முறையை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான காப்பீட்டுப் பாதுகாப்புகளைத் தனித்தனியாகத் தேர்வு செய்துகொள்ள முடியும்.
இதன்படி, மோட்டார் வாகனக் காப்பீடு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவு – மூன்றாம் நபர் காப்பீடு: விபத்துகளில் பிறருக்கு ஏற்படும் காயம், உயிரிழப்பு மற்றும் சொத்துச் சேதங்களுக்கான இழப்பீட்டுப் பொறுப்பை ஏற்கும். இது கட்டாயக் காப்பீடாகும்.

இரண்டாவது பிரிவு – பயணிகளுக்கான காப்பீடு: காரில் பயணிப்பவர்கள், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மற்றும் காப்பீடு செய்தவரின் பணியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான சட்டப்பூர்வப் பொறுப்புகளை உள்ளடக்கியது. இது விருப்ப அடிப்படையிலானது.

மூன்றாவது பிரிவு – தனிநபர் விபத்துக் காப்பீடு: வாகன உரிமையாளருக்கான தனிநபர் விபத்துக் காப்பீடு கட்டாயமாகும். அதேசமயம், பயணிகள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மற்றும் உரிமையாளர் அல்லாத ஓட்டுநர்களுக்கான கூடுதல் காப்பீட்டை விருப்பத்தின் அடிப்படையில் பெறலாம்.

நான்காவது பிரிவு – சொந்த வாகனத்துக்கான காப்பீடு: விபத்து அல்லது இதர காரணங்களால் காப்பீடு செய்யப்பட்ட வாகனத்துக்கு ஏற்படும் சேதம் மற்றும் இழப்புகளுக்கான பாதுகாப்பை வழங்கும். இதுவும் விருப்ப அடிப்படையிலானது.

இந்த புதிய முறையில், மூன்றாம் நபர் காப்பீடு மட்டும் கட்டாயமாக இருக்கும். மற்ற காப்பீட்டுப் பாதுகாப்புகளை வாகன உரிமையாளர்கள் தங்களது தேவைக்கேற்ப தேர்வு செய்யலாம். இதற்காக ஆன்லைன் மற்றும் நேரடி காப்பீட்டு விற்பனையின்போது வாடிக்கையாளர்களிடம் விருப்பத் தேர்வுப் படிவம் வழங்கப்பட வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏஐ உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே காப்பீடு வைத்திருப்பவர்களும் தங்களது பாலிசி காலத்தின்போது பயணிகளுக்கான கூடுதல் காப்பீட்டைச் சேர்த்துக்கொள்ளலாம். இதற்கு கூடுதல் பிரீமியம் செலுத்த வேண்டும். இதற்காக ஏற்கெனவே உள்ள மூன்றாம் நபர் காப்பீட்டைப் புதுப்பிக்கவோ ரத்து செய்யவோ தேவையில்லை. 

ஆனால், கூடுதல் காப்பீடு நடைமுறைக்கு வரும் தேதி மற்றும் நேரம் காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்புதல் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.மேலும், ஒவ்வொரு காப்பீட்டுப் பிரிவுக்கும் வசூலிக்கப்படும் பிரீமியம் தொகையைத் தனித்தனியாக பாலிசியில் குறிப்பிட வேண்டும். காப்பீடு வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்குத் தகவல் அறிக்கை மற்றும் விருப்பத் தேர்வுப் படிவத்தையும் வழங்க வேண்டும்.

புதிய நடைமுறை டிசம்பர் 15 முதல் வழங்கப்படும் அனைத்து தனியார் கார் மற்றும் இருசக்கர வாகனக் காப்பீட்டுப் பாலிசிகளுக்கும் பொருந்தும். இந்தத் திட்டங்களை அதே நாளில் பீமா சுகம் இணையதளத்திலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என ஐஆர்டிஏஐ அறிவுறுத்தியுள்ளது.

முந்தைய செய்தி
புதிய யூனிகார்ன் அந்தஸ்து ஸ்டார்ட்அப் - பிரிட்டனை முந்தியது இந்தியா
அடுத்த செய்தி
தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - முழு விவரம்

தொடர்புடைய செய்திகள்